தீக்குளிக்க முயன்ற லாரி டிரைவரால் பரபரப்பு

நடை பாதை விட வலியுறுத்தி லாரி டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-08 20:53 GMT

நடை பாதை விட வலியுறுத்தி லாரி டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கலெக்டர் கார்மேகத்திடம் மனுக்கள் கொடுத்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை அருகே உள்ள பெரியவடகாம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 40). லாரி டிரைவர்.

இவர் மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் மறைத்து எடுத்து வந்த கேனில் இருந்த டீசலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பரபரப்பு 

இது குறித்து அவர் கூறும் போது. 1½ ஏக்கர் விவசாய நிலம் மற்றும் நிலத்தையொட்டி வீடு உள்ளது. நிலம், வீட்டிற்கு செல்ல புறம்போக்கு பாதை இருந்தது. தற்போது அந்த புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். ஆக்கிரமித்தவர்களுக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் பட்டா வழங்கி உள்ளனர்.

இதனால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெற்றவர்கள் தற்போது எங்கள் விவசாய நிலம் மற்றும் வீடுகளுக்கு செல்ல பாதை விட மறுக்கிறார்கள். இதனால் வீட்டிற்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதித்து உள்ளது. எனவே நடைபாதை விட வலியுறுத்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என்று கூறினார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்