பள்ளி சுற்று சுவர் மீது லாரி மோதியது வடமாநில டிரைவர் படுகாயம்
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி சுற்று சுவர் மீது லாரி மோதியது வடமாநில டிரைவர் படுகாயம்
கண்டாச்சிமங்கலம்
உத்திரப்பிரதேச மாநிலம் காசியா பகுதியை சேர்ந்தவர் அன்சாரி மகன் அலாவுதீன்(வயது 40). லாரி டிரைவரான இவர் சென்னையில் இருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார். மாடூர் அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் ஏறி இறங்கி மறுபக்கம் உள்ள அரசு தொடக்க பள்ளியின் சுற்று சுவர் மீது மோதி நின்றது. இதில் படுகாயம் அடைந்த டிரைவர் அலாவுதீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி மோதியதில் பள்ளியின் 70 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.