உப்பு ஏற்றி வந்த லாாி மோதி கோவில் இடிந்து விழுந்தது
திருவாரூரில் உப்பு லோடு ஏற்றி வந்த லாரி மோதி கோவில் இடிந்து சேதமடைந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் லாாி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவாரூர்:
திருவாரூரில் உப்பு லோடு ஏற்றி வந்த லாரி மோதி கோவில் இடிந்து சேதமடைந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் லாாி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
வீரன் கோவில்
திருவாரூர் அருகே கூடூர் என்கிற இடத்தில் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்புறம் நெடுஞ்சாலைக்கு அருகில் அசகண்ட வீரன் சிலையுடன் கூடிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வழிபாடு செய்து செல்வது வழக்கம்.இந்தநிலையில் நேற்று அதிகாலை வேதாரண்யத்திலிருந்து உப்பு லோடு ஏற்றி கொண்டு சென்னை துறைமுகத்துக்கு சென்ற லாரி கூடூர் அசகண்ட வீரன் கோவில் மீது திடீரென மோதியது. இதில் கோவில் முற்றிலும் இடிந்து சாமி சிலைகளும் சேதமடைந்தன. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
சாமி தரிசனம்
விசாரணையில் வேதாரண்யத்தில் இருந்து உப்பு லோடு ஏற்றி செல்லும் லாரிகள் அனைத்தும் காரைக்கால் வழியாக சென்னைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் திருவாரூர் புலிவலம் விஷ்ணு தோப்பு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் தர்மராஜ் வேதாரண்யத்தில் இருந்து உப்பு லோடு ஏற்றி கொண்டு வரும் வழியில் காடந்தேத்தி அய்யனார் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.இதைத்தொடர்ந்து தனது மனைவி கார்த்திகா, மகன் முத்துக்குமார், மாமனார் செல்வம், மாமியார் ராஜேஸ்வரி ஆகியோரை லாரியில் ஏற்றி கொண்டு, அவர்களை வீட்டில் இறக்கி விட்டு செல்வதற்காக இந்த வழியாக வந்ததாக கூறப்படுகிறது.
டிரைவருக்கு வலைவீச்சு
கூடூர் பகுதியில் வந்த போது லாரி எதிரில் மாடு நிற்பது போன்று தோன்றியதால் டிரைவர் தர்மராஜ் லாரியை திருப்பியதன் விளைவாக அருகில் இருந்த கோவிலின் மீது மோதியுள்ளார். இதில் கோவில் முற்றிலும் இடிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் தர்மராஜின் மாமனார் செல்வம் (வயது57) காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த பகுதியில் உள்ள மக்களின் எல்லை தெய்வமாக இருக்கும் கண்ணாயிரம் மூர்த்தி அய்யனார் கோவில் முன்பு உள்ள அசகண்ட வீரன் கோவில் முழுவதுமாக இடிந்து சாமி சிலைகளும் சேதமடைந்தை அப்பகுதி மக்கள் வந்து பார்த்து சென்றனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிவைர் தர்மராஜை தேடி வருகின்றனர்.