தங்கும் விடுதி உரிமையாளர் வீட்டில் ரூ.20 லட்சம் கொள்ளை

அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு சாவியை காவலாளியிடம் வாங்கி தங்கும் விடுதி உரிமையாளர் வீட்டில் ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-08-25 20:15 GMT
கணபதி


அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு சாவியை காவலாளியிடம் வாங்கி தங்கும் விடுதி உரிமையாளர் வீட்டில் ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


மகளிர் விடுதி உரிமையாளர்


கோவை கணபதி பாரதிநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கலையரசன். இவருடைய மனைவி ஸ்ருதி (வயது 51). இவர் பீளமேடு சித்ரா அருகே மகளிர் விடுதி நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி சாவியை காவலாளியிடம் கொடுத்தார். பின்னர் அவர் சித்ராவில் உள்ள தனது மகளிர் விடுதிக்கு சென்று தங்கினார்.


இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர், காவலாளியிடம், தான் ஸ்ருதி மகனின் நண்பன் என்றும், தனது உடைகள் அவரது வீட்டில் இருப்பதால் அதை எடுத்துக் கொள்ள சாவியை தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை நம்பிய காவலாளி, ஸ்ருதியின் வீட்டு சாவியை கொடுத்தார்.


ரூ.20 லட்சம் திருட்டு


இதற்கிடையே அந்த காவலாளி, ஸ்ருதியை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகனின் நண்பர் என கூறி ஒருவர் வந்து வீட்டுச்சாவியை கேட்டதால் கொடுத்ததாக கூறி உள்ளார்.


அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ருதி, கணபதியில் உள்ள வீட்டுக்கு வேகமாக வந்து பார்த்தார். அப்போது அவரது வீட்டில் இருந்த உடைமைகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை காணவில்லை. அதை அந்த மர்ம நபர் கொள்யைடித்து சென்றது தெரிய வந்தது.


வலைவீச்சு


இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஸ்ருதியின் மகனின் நண்பர் என கூறி வீட்டு சாவியை வாங்கி பணத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கைரேகை நிபுணர்கள் வந்து அந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்