ரெயிலில் செல்ல முடியாத ஏக்கத்தில்சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை

போடி அருகே ரெயிலில் செல்ல முடியாத ஏக்கத்தில் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2023-10-10 18:45 GMT

போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் சந்தில் வசிப்பவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் பாலாஜி என்ற சக்திவேல் (வயது 15). இவர், கடந்த ஆண்டு 9-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். பாலாஜி ரெயிலில் பயணம் செய்ய வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார். இதனால் தினமும் போடி ரெயில் நிலையம் பகுதியில் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் வீட்டில் பெற்றோரிடம் தன்னை சென்னைக்கு ரெயிலில் அழைத்து செல்ல வேண்டும் என்று கூறி வந்தார். அதற்கு அவரது பெற்றோர் வாய்ப்பு கிடைக்கும்போது அழைத்து செல்வதாக தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ராமகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயா ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். பாலாஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் வேலை முடிந்து ஜெயா வீட்டிற்கு வந்தார்.

அப்போது பாலாஜி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த போடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரெயிலில் செல்ல முடியாத ஏக்கத்தில் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்