ஓடும் லாரியில் இருந்து மரக்கட்டைகள் சரிந்து வேன் மீது விழுந்தன

ஓடும் லாரியில் இருந்து மரக்கட்டைகள் சரிந்து வேன் மீது விழுந்தன

Update: 2023-06-23 19:20 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள அரசு காகித ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (55) என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலையில் வாத்தலை அருகே கோட்டூர் என்ற இடத்தில் லாரி வந்தபோது லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளின் பாரம் தாங்காமல் கட்டைகள் சரிந்து கீழே விழுந்தன. அப்போது எதிர் திசையில் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் இருந்து லால்குடிக்கு வாழை மரங்களை ஏற்றி வந்த வேன் மீது கட்டைகள் விழுந்தன. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் காட்டுப்புத்தூரை சேர்ந்த வைரப்பெருமாள் மகன் செல்வராஜ் (40), வேனின் மேல்புறத்தில் அமர்ந்திருந்த அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில் (40), சக்திவேல் (37), விஜய் (21), பிரபு (28), மணிகண்டன் (26), பெரியசாமி (37) ஆகிய 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்