பூட்டியே கிடக்கும் கால்நடை மருத்துவமனை
லோயர்கேம்பில் கால்நடை மருத்துவமனை பூட்டியே கிடக்கிறது.
கூடலூர் நகராட்சியில் 21-வது வார்டு பகுதிகளான லோயர்கேம்ப், பளியன்குடி நாயக்கர்தொழு, வெட்டுக்காடு, காஞ்சிமரத்துறை, அம்மாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிகளவில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க லோயர்கேம்ப் அரசு கால்நடை மருத்துவமனைக்கு விவசாயிகள் சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர டாக்டர் நியமனம் செய்யவில்லை. இதனால் கூடலூரில் இருந்து வாரத்திற்கு 2 நாட்களுக்கு டாக்டர் வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கால்நடை மருத்துவமனைக்கு டாக்டர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் கால்நடை மருத்துவமனை பூட்டி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே லோயர்கேம்ப் கால்நடை மருத்துவமனைக்கு விரைவில் நிரந்தரமாக டாக்டரை நியமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.