நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்
ஆற்காட்டில் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆற்காட்டில் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிக்கு பூட்டு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா நகர் மாசாபேட்டை பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 212 மாணவ -மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் இந்தப் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு சென்று கல்வி கற்கின்றனர்.
இதனால் நாளுக்கு நாள் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. எனவே போதுமான ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து நேற்று பள்ளியின் முன்பக்க கேட்டில் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் நியமனம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு தொகுதி ஜே.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் செல்வம், குணா, தட்சிணாமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்
அப்போது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. தகவல் தெரிவித்து உடனடியாக இரண்டு ஆசிரியர்களை நியமனம் செய்தார். இதனால் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.