ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழிப்பறைகளுக்கு பூட்டு ஒரே கழிவறையை ஆண்களும், பெண்களும் பயன்படுத்தும் அவலம்

கச்சிராயப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழிப்பறைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

Update: 2022-10-17 18:45 GMT


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்கிற பழமொழிக்கு ஏற்ப, தூய்மையே நமது ஆரோக்கியத்துக்கான அடிப்படையாகும். அந்த வகையில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் சுகாதாரம் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது.

கழிப்பறைகளை பூட்டினர்

ஆனால், இங்கு சுகாதார நிலையத்திலேயே, கழிப்பறைகள் பூட்டப்பட்டு, யாருக்கும் பயன்படாத நிலையில் கிடக்கிறது. அது வேறு எங்கும் இல்லை, கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான். பெயர் தான் ஆரம்ப சுகாதார நிலையம், ஆனால் இங்கு ஆரம்பமே தலைகீழாக இருக்கிறது. ஏனெனில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அதிகமாக சார்ந்து இருப்பது கிராமத்து மக்கள் தான். அவர்களிடம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமானதாகும்.

அதில் ஒன்று தான் கழிப்பறை பயன்பாடு. அதனால் தான், கழிப்பறை பயன்பாடு குறித்து மத்திய, மாநில அரசுகள் மக்களிடையே தொடர் விழிப்புணர்வுகளை முன்னெடுத்து கொண்டு இருக்கிறது.

ஆனால் சத்தமே இல்லாமல், இதுபோன்ற சில நிர்வாகங்கள் கழிப்பறையை பூட்டி வைத்து, மீண்டும் அவர்களே திறந்த நிலை கழிப்பறையை பயன்படுத்துவதற்கே அழைத்து செல்லும் அவல நிலையும் நிலவுகிறது என்பதற்கு, இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஆண், பெண்களுக்கு ஒரே கழிவறை

கச்சிராயப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் உள்ள 6-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இதில் தினமும் கர்ப்பிணி பெண்கள் வந்து செல்கிறார்கள். இதுபோன்று சுகாதார நிலையத்துக்கு வருபவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக 3 கழிப்பறைகள் உள்ளன. ஆனால் இதில் 2 கழிப்பறைகளை பூட்டு போட்டு பூட்டிவிட்டனர்.

மாறாக ஒரே ஒரு கழிப்பறையை மட்டும் திறந்து விட்டுள்ளனர். இதை தான் இங்கு வருபவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சிறுநீர் பரிசோதனைக்காக மாதிரி எடுத்து கொடுப்பதற்கும், கழிவறை பயன்பாட்டுக்கும் பயன்படுத்துகிறார்கள். இதில் உச்சபட்ச கொடுமை என்னவென்றால் ஆண், பெண் இருபாலருக்கும் இந்த ஒரே ஒரு கழிப்பறைதான்.

சிகிச்சை அளிப்பதிலும் அலட்சியம்

இதேபோன்று, ஆரம்ப சுகாதார நிலையத்திலும் போதிய அடிப்படை வசதிகள் நிறைவேற்றி கொடுக்கப்படாமல் இருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் டாக்டரை சந்திக்க செல்வதற்காக தரையில் அமர்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் மருத்துவமனை பணியாளர்களில் சிலர் நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டுகிறார்கள். அதோடு, டாக்டர் அளிக்கும் மருத்துவ சீட்டை கவனிக்காமல் செவிலியர்களில் சிலர் ஊசி போட்டு வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் சமீபத்தில் கூட ஒரு வாலிபருக்கு நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற அலட்சியம் பெரும் விபரீதங்களை ஏற்படுத்திவிடும். இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என்கிற குரல் ஓங்கி இருக்கிறது.

எனவே இந்த ஆரம்ப சுகதார நிலையத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, நோயாளிகளின் அல்லல்களை தீர்க்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்