பஞ்செட்டியில் 4 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பஞ்செட்டியில் 4 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பஞ்செட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சித்ரா (வயது 42) என்பவருக்கு சொந்தமான காபி மற்றும் பலசரக்கு கடையின் பூட்டை உடைத்து ரூ.18 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு போனது.
அதேபோல் அந்த கடையின் அருகே கோபால் என்பவரின் ஓட்டலில் பூட்டை உடைத்து ரூ.8 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடினர். இது தவிர சுரேந்தர் (30) என்பவருக்கு சொந்தமான கடையின் பூட்டை உடைத்து ரூ.1000, பாண்டியன் (28) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.2 ஆயிரத்தை திருடி உள்ளனர்.
தொடர்ந்து ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.