உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளன கூட்டம்
உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளன கூட்டம் நடந்தது.
கரூரில் நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளனத்தின் (சி.ஐ.டி.யு) மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் பொன் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கணேசன், துணைத் தலைவர் ரெங்கராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து தனியார் கைகளில் அளிக்கும் அரசாணைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தினக்கூலி, சுயஉதவி குழு, ஒப்பந்த தொழிலாளி என பல்வேறு பெயர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். வெளி முகமை, ஒப்பந்த முறை என்ற முறைகளை ஒழித்திட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் இபிஎப், இஎஸ்ஐ, 8 மணி நேர வேலை, வார விடுப்பு, பண்டிகை கால விடுப்பு உள்ளிட்ட அடிப்படை சட்டங்களை அமலாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.