ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்: 7 கவுன்சிலர் பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 7 கவுன்சிலர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

Update: 2022-07-08 21:33 GMT

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 7 கவுன்சிலர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

உள்ளாட்சி தேர்தல்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 2 பேரூராட்சியில் கவுன்சிலர் பதவி மற்றும் 14 கிராம ஊராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிகளுக்கு மொத்தம் 42 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.

இதில் அந்தியூர் ஒன்றியம் குப்பாண்டம்பாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு, நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் கிராம ஊராட்சி 10-வது வார்டு, பொலவபாளையம் கிராம ஊராட்சி 5-வது வார்டு, பெருந்துறை ஒன்றியம் கருக்குபாளையம் கிராம ஊராட்சி 6-வது வார்டு, சத்தியமங்கலம் ஒன்றியம் உக்கரம் கிராம ஊராட்சி 4-வது வார்டு, டி.என்.பாளையம் ஒன்றியம் பெருமுகை கிராம ஊராட்சி 11-வது வார்டு, கணக்கம்பாளையம் கிராம ஊராட்சி 1-வது வார்டு, புளியம்பட்டி கிராம ஊராட்சி 3-வது வார்டு, தாளவாடி ஒன்றியம் தலமலை கிராம ஊராட்சி 2-வது வார்டு ஆகிய 9 வார்டுகளுக்கு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இன்று தேர்தல்

அம்மாபேட்டை ஒன்றியம் சிங்கம்பேட்டை கிராம ஊராட்சி 2-வது வார்ட்டில் 2 பேரும், பவானி ஒன்றியம் பெரியபுலியூர் கிராம ஊராட்சி 3-வது வார்டில் 4 பேரும், பவானிசாகர் ஒன்றியம் தொப்பம்பாளையம் கிராம ஊராட்சி 3-வது வார்டில் 2 பேரும், கோபி ஒன்றியம் கோட்டுபுள்ளாம்பாளையம் கிராம ஊராட்சி 1-வது வார்டில் 2 பேரும், மொடக்குறிச்சி பேரூராட்சி 46 புதூர் கிராம ஊராட்சி 1-வது வார்டில் 4 பேரும், அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டில் 3 பேரும், அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டில் 3 பேரும் என 7 பதவிகளுக்கு அ.தி.மு.க., தி.மு.க., சுயேச்சை என 20 பேர் போட்டியில் உள்ளனர்.

இதனால் 7 கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்காக இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான அனைத்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

இதைத்தொடர்ந்து வருகிற 12-ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்றும் (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வருகிற 12-ந் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஈரோடு அருகே 46 புதூர் 1-வது வார்டு, ஆணைக்கல்பாளையம், லக்காபுரம், சோலார், மூலப்பாளையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதியில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாபேட்டை, அத்தாணி, கோபி, பவானிசாகர், அந்தியூர் ஆகிய பகுதிகளில் உள்ள, 24 டாஸ்மாக் கடைகளுக்கும் இன்றும் (சனிக்கிழமை), வருகிற 12-ந்தேதி விடுமுறை விடுக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு, அரசு சார்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான எச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்