தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-01 18:10 GMT

பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

மானியத்துடன் கடன்

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆதிதிராவிட பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக ரூ.17.50 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி பெற்று புதிதாக உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் தொடங்கலாம்.

இந்ததிட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் 18 வயதிற்கு மேல் இருக்கவேண்டும். சேவைப்பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும், உற்பத்திப் பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேவைப் பிரிவிற்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலும். உற்பத்திப் பிரிவிற்கு ரூ.50 லட்சம் வரையில் தொழில் தொடங்க அனுமதிக்கப்படுவர்.

35 சதவீதம்

2022-23-ம் நிதி ஆண்டிற்கான குறியீடு 156 நபர்களுக்கு ரூ.450 கோடி மானியம் என மாவட்ட தொழில் மையத்திற்கு இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழி முறைகளை பின்பற்றி வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக நகர்ப்புறத்தில் 25 சதவீத மானியம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். மேலும் இத்திட்டத்தில் திருத்திய வழிகாட்டுதலின்படி கால்நடை மருத்துவரிடமிருந்து பெறப்படும் திட்ட அறிக்கையின் பேரில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் பண்ணைகள் சார்ந்த தொழில்கள் தொடங்க கடன் வசதி செய்து தரப்படும்.

எனவே மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், எழில் நகர், திருப்பத்தூர் என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்