பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினருக்கு கடனுதவி சிறப்பு முகாம்

பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினருக்கு கடனுதவி சிறப்பு முகாம்

Update: 2023-01-13 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்கும் முகாம் நடக்கிறது என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன் உதவி திட்டங்கள்

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற்கடன், தனிநபர் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடன் உதவி, ஆட்டோ கடன், சிறுகடன் திட்டம், சுய உதவி குழு ஆகிய பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடன் உதவி பெறுவதற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், 18 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். அதன்படி 2022-2023-ம் நிதியாண்டிற்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நடக்கிறது.

சிறப்பு முகாம்

இந்த முகாம்கள் 19-ந்தேதி திருவாரூர் தாலுகா அடியக்கமங்கலத்தில் காலை 10 மணிக்கும், நன்னிலம் டவுன் பகுதியில் 12 மணிக்கும் நடக்கிறது. 20-ந் தேதி குடவாசல் டவுன் பகுதியில் காலை 10.30 மணிக்கும், வலங்கைமான் டவுன் பகுதியில் மதியம் 2.30 மணிக்கும், 23-ந்தேதி கூத்தாநல்லூர் டவுன் பகுதியில் 10.30 மணிக்கும், நீடாமங்கலம் தாலுகா வடூவூரில் மாலை 2.30 மணிக்கும் நடக்கிறது. 24-ந் தேதி திருத்துறைப்பூண்டி தாலுகா மணலியில் காலை 10.30 மணிக்கும், மன்னார்குடி தாலுகா கோட்டூரிலும் நடக்கிறது.

முகாமில் கலந்து கொள்பவர்கள் விண்ணப்பத்துடன் சாதிசான்று நகல், வருமான சான்று நகல், இருப்பிட சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கடன் பெறும் தொழில் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்கள் மற்றும் நகலுடன் கலந்து கொள்ளவேண்டும். இந்த முகாம் குறித்த விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருவாரூர் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர வங்கியை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்