நகைக்கடன் மோசடியில் ஈடுபட்டதாக வங்கி அதிகாரி மீது புகார்

Update: 2023-06-05 16:39 GMT


கேத்தனூர் வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் வங்கி அதிகாரி நகைக்கடை மோசடியில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.

ஏமாற்றி நகைக்கடன்

பல்லடம் கேத்தனூர் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் பாரத ஸ்டேட் வங்கி கேத்தனூர் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளோம். இந்த வங்கியில் நகை கடன் அதிகாரியாக பணியாற்றியவர் அறிமுகம் என்பதால் நகைக்கடன், பயிர்க்கடன் பெற்று வந்தோம். இந்த நிலையில் அந்த அதிகாரி தனக்கு நிலம் வாங்குவதற்கு பணம் தேவைப்படுகிறது. இந்த வங்கியில் வேலை செய்வதால் எனது பெயரில் நகை அடகு வைக்க முடியாது. அதனால் உங்கள் பெயரில் நகையை அடகு வைத்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை நம்பி கையெழுத்து போட்டுக்கொடுத்தோம்.

நடவடிக்கை

அதன்பிறகு எங்கள் பெயரில் வைத்த நகைக்கு வட்டி எதுவும் கட்டவில்லை என்று எங்களுக்கு தகவல் வந்தது. வங்கிக்கு சென்று விசாரித்த போதே எங்கள் பெயரில் நகையை அதிகப்படியான பணத்துக்கு அடகு வைத்து வேறு நபர்களின் பெயருக்கு பணம் பரிமாற்றப்பட்டு எடுத்துக்கொண்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் எங்களிடம் விசாரித்தார்கள். இந்த நிலையில் நகைக்கடனை திருப்பி செலுத்துமாறு எங்களுக்கு வங்கியில் இருந்து சிவில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். அதிகாரி செய்த செயலால் நாங்கள் வங்கிக்கு பணம் செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு 74 பேரிடம் கோடிக்கணக்கில் நகை அடமானம் வைத்து அந்த அதிகாரி கடன் பெற்றது தெரிய வந்துள்ளது. எனவே எங்களை ஏமாற்றிய அதிகாரி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்