சரக்கு ரெயிலில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றும் விவகாரம்: லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம்
புதுக்கோட்டையில் சரக்கு ரெயிலில் இருந்து நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றுவது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நெல் மூட்டைகள்
புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில்கள் மூலம் நெல் மூட்டைகள் திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வருவது வழக்கம். இதனை லாரிகள் மூலம் அரவைக்காக அரிசி ஆலைகள் மற்றும் குடோன்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்த நிலையில் திருவாரூரில் இருந்து சரக்கு ரெயிலில் 1,950 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் புதுக்கோட்டை நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு நேற்று வந்தது.
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் அரவைக்காக அரிசி ஆலைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
போராட்டம்
இந்த நிலையில் லாரிகளில் நெல் மூட்டைகளை கொண்டு செல்வதில் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் சிலருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மற்றவர்களுக்கு லோடு வழங்குவதில்லை என கூறி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் அவர்களுக்கும் லோடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து சரக்கு ரெயிலில் இருந்து நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றினர். அதன்பின் லாரிகள் மூலம் அரவை மில்களுக்கு நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டன.