கூட்டு குடும்பமாக வாழ்ந்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்
கூட்டு குடும்பமாக வாழ்ந்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கூறினார்.
திருவாரூர்:
கூட்டு குடும்பமாக வாழ்ந்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கூறினார்.
விழிப்புணர்வு வாரம்
திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
குறிப்பாக தற்கொலை தடுக்க விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கையெழுத்திட்டனர்.உளவியல் துறையின் தலைவர் வித்தியா, பேராசிரியர் மாமன் ஜோசப், துறையின் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்று பயிற்சி அளித்தனர்.
நல்லிணக்கம்
உளவியல் துறை சார்பில் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் ஆய்வு மாணவர்களுக்கும் மன அழுத்தம் அல்லது தற்கொலை சிந்தனை உள்ள நபர்களை எப்படி மீட்டுக் கொண்டு வர வேண்டும். இதுதொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மு.கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:- மாணவர்கள் உயர்கல்வி பெறும் போது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பெற முடியும்.
கூட்டு குடும்பம்
மேலும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு தன்னம்பிக்கையை பெற முடியும். கூட்டு குடும்பமாக வாழ்வதின் மூலம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேச முடியும். இதனால் மன அழுத்தம், தற்கொலை போன்ற எண்ணங்களில் இருந்து விடுபட முடியும். ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் அமைத்து மாணவர்கள் அதிகமாக புத்தகங்களை படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பல்கலைக்கழக பதிவாளர் திருமுருகன், பேராசிரியர்கள்,மாணவ- மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.