புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் கால்நடைகள் ரூ.2½ கோடிக்கு விற்பனை
புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் கால்நடைகள் ரூ.2½ கோடிக்கு விற்பனையானது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் கால்நடைகள் ரூ.2½ கோடிக்கு விற்பனையானது.
கால்நடைகள்
புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் வியாழக்கிழமை தோறும் கால்நடை சந்தை நடைபெறுகிறது. இதற்கு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை பிடித்து செல்லவும், விற்கவும் வருகின்றனர்.
நேற்று நடந்த சந்தைக்கு, 40 எருமைகள், 250 கலப்பின மாடுகள், 80 கன்றுக்குட்டிகள், 300 ஜெர்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எருமைகள் 18 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரையும், கருப்பு வெள்ளை மாடு 24 ஆயிரம் முதல் 42 ஆயிரம் ரூபாய் வரையும், ஜெர்சி 22 ஆயிரம் ரூபாய் முதல் 48 ஆயிரம் ரூபாய் வரையும், சிந்து 16 ஆயிரம் ரூபாய் முதல் 42 ஆயிரம் ரூபாய் வரையும், நாட்டு மாடு 72 ஆயிரம் ரூபாய் வரையும், வளர்ப்பு கன்றுக்குட்டிகள் 5 ஆயிரம் ரூபாய் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது.
ரூ.2½ கோடிக்கு விற்பனை
அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ஒன்று 7 ஆயிரம் ரூபாய் வரையும், 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள் 6 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது. தீபாவளி பண்டிகைக்காக இறைச்சி ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் ஆடுகள் விலை 2 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. சந்தை தொடங்கிய 3 மணி நேரத்தில் ஆடுகள் ரூ.1 கோடிக்கும், மாடுகள் ரூ.1½ கோடிக்கும் என மொத்தம் ரூ.2½ கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, 'கடந்த வாரத்தை விட ஆடு, மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதே நேரம் விலையும் 2 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட அனைத்து கால்நடைகளும் விற்பனையானது.' என்றார்.