சென்னையில் இலக்கிய திருவிழா - அடுத்த ஆண்டு ஜனவரி 6, 7, 8-ந்தேதிகளில் நடக்கிறது

தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னையில் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 6, 7, 8-ந்தேதிகளில் இலக்கிய திருவிழா நடைபெற உள்ளது.

Update: 2022-12-14 05:07 GMT

இலக்கிய செழுமைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொது நூலக இயக்ககம் சார்பில் வைகை, காவேரி, பொருநை, சிறுவாணி ஆகிய நதி நாகரிக மரபு அடிப்படையில் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. அதேபோல், சென்னையிலும் இலக்கிய திருவிழா நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதில் பொருநை இலக்கிய திருவிழாவானது கடந்த மாதம் (நவம்பர்) 26, 27-ந்தேதிகளில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளின் பண்பாட்டின் கூடாரமாக இருக்கும் சென்னையில் இலக்கியத் திருவிழா அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடத்தப்பட இருக்கிறது.

இந்த விழாவில் இலக்கிய படைப்புகள், பண்பாட்டின் உச்சங்கள் என இலக்கிய வாசகர்களுக்கான அரங்கமும், கல்லூரி மாணவர்களை இலக்கியம் நோக்கி வழிநடத்தி செல்லும் வகையில் சிறந்த ஆளுமைகளின் உரையாடலுடன் கூடிய மாணவர்களுக்கான தனி அரங்கமும், சிறுவர்களுக்கு கதை, பாடல், நாடகம் வழியாக நமது இலக்கிய உலகை திறந்துகாட்டும் வகையில் சிறுவர் இலக்கிய அரங்கமும், திரை மொழியாக உலக, இந்திய சினிமாக்கள் கொண்ட காட்சி அரங்கமும் அமைய இருக்கிறது.

அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளான பொம்மலாட்டம், நாடகம் மற்றும் மரபுசார் விளையாட்டுகளும் இடம்பெறும். இந்த 3 நாட்களும் மக்கள் அனைவரும் விழாவை கண்டுகளிக்கலாம். சென்னை இலக்கிய திருவிழாவினை கொண்டாடும் விதமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்த நேரத்தில் வண்ண விளக்குகளாலும், கலை வேலைப்பாடுகளாலும், ஓவியங்களாலும் நிறைந்திருக்கும்.

இதுதவிர நூலக வளாகத்தில் அரிய பருவ இதழ்கள், நூல்கள், ஆவணங்கள், தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் காலம் முதல் வெளிவந்த அரிய நாணயங்கள், சென்னையின் வரலாறு சார்ந்த படங்களும் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.

இந்த இலக்கிய திருவிழாவுக்கான இலச்சினையை (லோகோ) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்