தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் - ராமதாஸ்
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுப்பிரியாவின் தந்தையின் குடிப்பழக்கம் தான் சான்று.
கூலித்தொழிலாளியான தமது தந்தையின் குடிப்பழக்கத்தால் தமது குடும்பத்தின் நிம்மதி குலைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத மாணவி விஷ்ணுப்பிரியா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். '' எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை.
என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும் என்பது தான். எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ, அப்போது தான் எனது ஆன்மா அமைதியடையும்" என்று விஷ்ணுப்பிரியா உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
விஷ்ணுப்பிரியாவின் வேண்டுகோள் எல்லா பெற்றோருக்கும் கேட்க வேண்டும்; அவர்கள் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். அரசுக்கும் அச்சிறுமியின் குரல் கேட்க வேண்டும்; அனைத்துக் குடும்பங்களிலும் அமைதி நிலவ தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.