மேட்டூரில் வெளி ஆட்களை வைத்து மது விற்பனை செய்த விவகாரம்:டாஸ்மாக் மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம்

வெளி ஆட்களை வைத்து மது விற்பனை செய்த விவகாரத்தில் மேட்டூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2023-06-06 18:45 GMT

வீடியோ வைரல்

சேலம் மாவட்டம் மேட்டூர் குருவப்பாடி என்ற இடத்தில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேர் வந்து மது வாங்கி உள்ளனர். அப்போது கடைக்குள் விற்பனையாளர்கள் பணியில் இல்லாமல் வெளி நபர் ஒருவர் அமர்ந்து மது விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் கடைக்குள் இருக்கும் அந்த நபரிடம் நீங்கள் டாஸ்மாக் ஊழியரே கிடையாது? அடையாள அட்டையை காட்டுங்கள்? எப்படி கடைக்குள் அமர்ந்து மது விற்கலாம்? என்றும், குவார்ட்டருக்கு கூடுலாக ரூ.10 தர முடியாது என்று வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது. மதுபிரியர் ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

பணி இடைநீக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர்களின் உத்தரவுப்படி டாஸ்மாக் மேற்பார்வையாளர் பணியில் இல்லாமல் வெளி ஆட்களை வைத்து மது விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த புகாரில் மேட்டூர் குருவப்பாடி டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் முருகனை நேற்று பணி இடைநீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குப்புசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், 'சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது பணி இடைநீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், சந்துக்கடைகளுக்கு மது வகைகளை மொத்தமாக அனுப்பி வைத்தாலும் நடவடிக்கை பாயும். மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்' என்றனர்.

---

மேலும் செய்திகள்