இரவில் வானில் ஜாலம் காட்டும் மின்னல்ஈரோடு மக்களை தொடர்ந்து ஏமாற்றும் மழை

ஈரோட்டில் இரவு நேரங்களில் வானில் மின்னல் ஜாலம் காட்டினாலும் மழை ஈரோடு மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. மேலும் பகலில் கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.

Update: 2023-03-30 21:59 GMT

ஈரோட்டில் இரவு நேரங்களில் வானில் மின்னல் ஜாலம் காட்டினாலும் மழை ஈரோடு மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. மேலும் பகலில் கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.

வெப்பம் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் வழக்கத்தை விட முன்கூட்டியே கோடை வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்டது. பிப்ரவரி மாதத்தின் 3-வது வாரத்தில் இருந்தே வெயில் அளவு அதிகரிக்க தொடங்கியது. வெயில் அளவு 100 டிகிரி என்ற அளவை தொடாதபோதே வெப்பத்தின் தன்மை மிக மிக அதிகமாக இருந்தது. மார்ச் மாதத்தின் பாதியில் இருந்து வெயிலின் அளவு அதிகரித்து இருக்கிறது.

ஏற்கனவே அவ்வப்போது வெயில் அளவு 100 டிகிரி அளவை தாண்டிய நிலையில், தினசரி வெப்பத்தின் தன்மை 100 டிகிரிக்கும் அதிகமாக இருக்கிறது. காலை 7 மணிக்கே சூரிய வெயில் கடுமையாகவே இருக்கிறது. பகல் 11 மணிக்கு மேல் மாலை 4 மணி வரை வெயில் உக்கிரமாகவே இருக்கிறது. பகலின் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது.

98 டிகிரி

மேலும் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு வெயில் வாட்டுகிறது. வாகனங்களில் செல்லும்போது சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் மிகவும் கடுமையாக உணரப்படுகிறது. வெந்நீரை ஊற்றியதுபோல அனல்காற்று வீசியது. நேற்று ஈரோட்டில் வெயிலின் அளவு அதிகபட்சமாக 98 டிகிரி பதிவாகி இருந்தது. ஆனால், 103 டிகிரிக்கும் அதிகமாக வெப்பத்தின் தாக்கம் இருந்தது.

இதனால் வீடுகளில் மின்விசிறி இல்லாமல் சிறிது நேரம் கூட உட்கார முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டியது. ஏ.சி.எந்திரங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே அறைகளுக்குள் தூங்க முடியும் என்ற அளவுக்கு இரவிலும் வெப்பம் கடுமையாக தாக்கியது. ஏ.சி.எந்திரங்கள் தரும் குளிரில்தான் பலரும் இரவில் நிம்மதியாக தூங்குகிறார்கள்.

வானில் மின்னல் ஜாலம்

இந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக மழைக்கான அறிகுறிகள் தென்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தாலும், ஈரோட்டில் தொடர்ச்சியாக போக்குகாட்டி வருகிறது.

3 நாட்களுக்கு முன்பு காலையில் இருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. வெயிலின் தாக்கமும் குறைவாக இருந்தது. எனவே மழை வரும் என்று எதிர்பார்த்த நிலையில் காலை 10 மணிக்கு மேல் சூரியன் வழக்கமாக சுட்டெரிக்க தொடங்கியது. இதுபோல் தினமும் இரவு நேரத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பது, வானில் மின்னல் வெட்டுவது தொடர்ந்து நடக்கிறது. இதனால் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக ஈரோட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தாலும் வானம் பொய்த்து வருகிறது. மின்னல் ஒளியால் ஜாலம் காட்டும் வானம் எப்போது மண்ணுக்கு மழையை பொழியும் என்று ஈரோடு மக்கள் மிகுந்த ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்