கார்த்திகை தீபத்திருநாளையொட்டி கோவில், வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு
கார்த்திகை தீபத்திருநாளையொட்டி கோவில், வீடுகளில் தீபம் ஏற்றி பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
கார்த்திகை தீபத்திருநாளையொட்டி கோவில், வீடுகளில் தீபம் ஏற்றி பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழா
கார்த்திகை தீபத்திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில், வீடுகளில் பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். மேலும் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
அதன்படி, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகையையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் தீப வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு காலையில் பால் அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது.
அதன்பிறகு பகல் 12 மணி அளவில் நடந்த உச்சி கால பூஜையில் சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலையில் கோவில் கருவறை, மண்டபங்கள் அனைத்திலும் வண்ண, வண்ண கோலங்கள் போடப்பட்டு சுமார் 5 ஆயிரம் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டன. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன.
அபிராமி அம்மன் கோவில்
இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் காலையில் பக்தர்கள் பரணி தீபம் ஏற்றினர். அதைத்தொடர்ந்து காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரருக்கு தங்க கவசம், புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கோவில் முழுவதும் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டன. பின்னர் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர் வெள்ளி இடப வாகனத்தில் புறப்பாடும், தேரடி வீதியில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தீபம் ஏற்றி வழிபாடு
திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆர்.வி.நகர் தண்டாயுதபாணி கோவில், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் திருக்கார்த்திகை தீப வழிபாடுகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் நாகல்நகர், பாரதிபுரம், கோவிந்தாபுரம், ஆர்.எம்.காலனி பகுதி உள்பட திண்டுக்கல் நகர் முழுவதும் உள்ள வீடுகளில் மக்கள் திருக்கார்த்திகையையொட்டி தீபம் ஏற்றினர். இதனால் நகர் பகுதி முழுவதும் கண்கொள்ளா காட்சியாக தீபங்கள் ஜொலித்தன. மேலும் சிலர் கம்பி மத்தாப்பூ, பூந்தொட்டி உள்பட பட்டாசுகள் வெடித்து திருக்கார்த்திகையை கொண்டாடினர்.
நத்தம், திருமலைக்கேணி
நத்தம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடந்தன. பின்னர் பெண்கள் கோவிலின் உள், வெளி பிரகாரங்களில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில், நத்தம் காளியம்மன், பகவதி அம்மன், ராக்காச்சி அம்மன், தில்லை காளியம்மன், விநாயகர் கோவில்களில் பக்தர்கள் கலந்துகொண்டு தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
திருமலைக்கேணியில் உள்ள பிரசித்திபெற்ற சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று காலை 10 மணிக்கு ஸ்கந்த பூஜையுடன் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து சுப்பிரமணியசுவாமிக்கு பால், நெய், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். அதன்பிறகு மாலை 6 மணிக்கு கோவில் முன்புள்ள 30 அடி உயரமுள்ள இரும்பு கம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில், திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி, செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி, வி.எஸ்.கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் முழுக்க அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு விளக்கொளியில் கோவில் ஜொலித்தது.
கோபால்பட்டி, வடமதுரை
கோபால்பட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் திருக்கார்த்திகையையொட்டி கொக்கப்பணை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மீனாட்சி, சுந்தரேசுவரர், வள்ளி-தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் மாலை 6 மணி அளவில் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் விஸ்வநாத், செயல் அலுவலர் கற்பகவெண்ணிலா ஆகியோர் செய்திருந்தனர்.
கொடைக்கானல்
இதேபோல் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில், ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில், டெப்போ காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கொடைக்கானலில் உள்ள கோடை இன்டர்நேஷனல் ஓட்டலில் சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டு, அதற்கு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 1,008 விளக்குகள் ஏற்றப்பட்டு, சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஓட்டலின் நிர்வாக இயக்குனர் பாண்டுரங்கன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.