கார்த்திகை திருவிழா நெருங்குவதையொட்டி பூளவாடியில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விற்பனையும் அதிகரித்து உள்ளது.
அகல் விளக்கு
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் டிசம்பர் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா அன்று வீடுகளில் விளக்குகள் வைத்து தீபம் ஏற்றி அழகு படுத்துவது வழக்கம். இது போல் கோவில்களில் பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவார்கள். கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் களைகட்டி வருகிறது. சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான 1000 அகல் விளக்குகள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல்விளக்குகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அகல் விளக்குகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
விற்பனை அமோகம்
அகல்விளக்கு தயாரிப்பு குறித்து தொழிலாளி ஒருவர் கூறியதாவது:-
உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பதற்கு கோதவாடி, கொழுமம் ஆகியவற்றில் உள்ள குளத்து மண் பயன்படுத்தப்படுகிறது. அங்கு மண் எடுப்பதில் சிரமம் உள்ளது. பூளவாடியில் 2 குடும்பங்கள் மட்டுமே மண்பாண்ட தொழில் செய்து வரும் நிலையில் உப்பாறு ஓடையில் களிமண் எடுத்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அரசின் சார்பில் அடையாள அட்டை இருந்தும் மண் எடுக்க முடியவில்லை என மண்பாண்ட தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மண் எடுப்பதற்கான வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த ஆண்டு அகல் விளக்கு விற்பனை அமோகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.