'லிப்ட்' அறுந்து விழுந்து 4 பேர் படுகாயம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் லிப்ட் அறுந்து விழுந்து பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-08-27 20:45 GMT


ஆர்.எஸ்.புரம்


கோவை ஆர்.எஸ்.புரத்தில் லிப்ட் அறுந்து விழுந்து பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


லிப்ட் அறுந்து விழுந்தது


கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் லிப்ட்டை பயன்படுத்தி தரைத்தளத்துக்கு இறங்கி கொண்டிருந்தனர்.


அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் அறுந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் லிப்ட்டுக்குள் சிக்கிய ஊழியர்கள் மனோஜ், காமராஜ், மலர்க்கொடி, வினோத் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் லிப்ட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 பேரையும் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


கட்டிட உரிமையாளர் மீது வழக்கு


இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், லிப்ட்டை முறையாக பராமரிக்காமல் அலட்சியமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கட்டிட உரிமையாளரான கோவை ராஜவீதியை சேர்ந்த விஷால் (வயது 45) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்