காதலித்து திருமணம் செய்த ஒரு மாதத்தில்கணவரை உயிரோடு எரித்து கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனைதிண்டிவனம் கோர்ட்டு தீர்ப்பு
காதலித்து திருமணம் செய்த ஒரு மாதத்தில் கணவரை உயிரோடு எரித்து கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி. நகர் பகுதியை சேர்ந்தவர் தஷ்ணாமூர்த்தி. இவரது மனைவி செல்வி. இவர்கள் பெற்றோர் இல்லாத சேதுபதி என்கிற சிறுவனை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் செல்வி இறந்ததை அடுத்து தஷ்ணாமூர்த்தி மாரியம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினரும், தொடர்ந்து சேதுபதியை வளர்த்து வந்தனர்.
சேதுபதிக்கு 25 வயதானபோது, அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் - குமுதா தம்பதியரின் 3-வது மகளான முருகவேணி (23) என்பவரை காதலித்தார். இதன் பின்னர், 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி சேதுபதி, முருகவேணி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் சேதுபதி, முருகவேணி வீட்டில் தங்கிவிட்டார். தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
வீட்டுக்குள் பூட்டி தீ வைத்தார்
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர்கள் குடியிருந்த வீட்டின் உள்ளே சேதுபதியை வைத்து வெளிப்புறமாக தாழிட்டு கூரையில் மண்எண்ணையை ஊற்றி முருகவேணி தீ வைத்தார். பின்னர் முருகவேணி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
கூரை வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. ஆனால், கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால், சேதுபதியால் தப்பிக்க முடியவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டுக்குள் சிக்கிய சேதுபதி, உடல்முழுவதும் எரிந்து கரிக்கட்டையாகி உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை
இது குறித்து மாரியம்மாள் திண்டிவனம் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகவேணியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று நீதிபதி ரகுமான் தீர்ப்பு அளித்தார். இதில் குற்றம்சாட்டப்பட்ட முருகவேணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 8 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு அளித்தார். இதில் அரசு தரப்பில் வக்கீல் ஆதித்தன் ஆஜரானார்.