கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை-மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு
கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
மேட்டூர்:
கொலை
மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). நிதி நிறுவன பங்குதாரர். இவர் கடந்த 5.9.2011 அன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் செல்வராஜின் மனைவி வனிதா (27)விடம் விசாரித்தனர். இதில் வனிதா, தனது கணவர் செல்வராஜை கழுத்தை நெரித்துக்கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடியது தெரியவந்தது.
ஆயுள் தண்டனை
அதாவது குடிபோதையில் செல்வராஜ், தனது மனைவி வனிதாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வனிதா, தனது கணவரை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். தொடர்ந்து வனிதாவை கருமலைக்கூடல் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு மேட்டூரில் உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி கணவரை கொன்ற வனிதாவுக்கு, ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குமாரசரவணன் தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் குழந்தைவேலு ஆஜராகி வாதாடினார்.