தாயை அடித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
தாயை அடித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தாயை அடித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
பெண் கொலை
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் மூளிபட்டி பகுதியை சேர்ந்தவர் குருசாமி என்ற ராஜா (வயது 30). இவருடைய தாய் சுப்புலட்சுமி என்ற சுப்புதாய். இந்தநிலையில் ராஜா, தனது தாயாரிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல கடந்த 11.4.2019 அன்று வழக்கம்போல் தனது தாயிடம் பணம் கேட்டு அவர் தகராறு செய்துள்ளார். சுப்புதாய் பணம் தர மறுக்கவே ஆத்திரத்தில் அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து தாயாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுப்புத்தாய் பரிதாபமாக இறந்தார்.
ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசாமி என்ற ராஜாவை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து குருசாமி என்ற ராஜாவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.