பல்லடம் அருகே கொத்தனாரை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
பல்லடம் அருகே கொத்தனாரை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூர்
பல்லடம் அருகே கொத்தனாரை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கொத்தனார் கொலை
மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் கொத்தனராக வேலை செய்து வந்தார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த அருஞ்சுனை முத்து (22) சித்தாளாக வேலை செய்தார். இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மல்லேகவுண்டன்பாளையத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். முருகன் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விட்டு பிரிந்து வசித்து வந்தார். அருஞ்சுனை முத்துவுக்கு திருமணமாகவில்லை.
இந்தநிலையில் கடந்த 23-2-2020 அன்று மாலை முருகனும், அருஞ்சுனை முத்துவும் தாங்கள் வேலை செய்த இடத்துக்கு அருகே அமர்ந்து மது குடித்தனர். அப்போது முருகன், அருஞ்சுனை முத்துவின் காதல் தோல்வி குறித்து விமர்சித்து பேசியுள்ளார். இதில் கோபம் அடைந்த அருஞ்சுனை முத்து சத்தம் போட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
ஆயுள் தண்டனை
இதில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அருஞ்சுனை முத்து, கீழே கிடந்த கல்லை எடுத்து முருகனின் தலை மற்றும் முகத்தில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினார். அருகில் இருந்தவர்கள் ரத்த காயத்துடன் கிடந்த முருகனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு, முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அருஞ்சுனை முத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட அருஞ்சுனை முத்துவுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.