தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கள்ளக்காதலியின் கணவரை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-04-11 20:02 GMT


கள்ளக்காதலியின் கணவரை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டது.

கள்ளத்தொடர்பு

விருதுநகர் எம்.ஜி.ஆர். சாலையை சேர்ந்தவர் இளங்கோ (வயது 31). இவரது மனைவி இந்துமதி. இவருக்கும் சாத்தூர் அமீர் பாளையத்தை சேர்ந்த தொழிலாளியான அஜித் என்ற நல்ல முகமது (22) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த இளங்கோ, மனைவி இந்துமதியையும், அஜித்தையும் கண்டித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி மாத்திநாயக்கன்பட்டி ரோட்டில் வைத்து இளங்கோவை, அஜித் வழிமறித்து வெட்டி கொலை செய்தார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சுப்புராம் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி, அஜித், அவருடைய கள்ளக்காதலி இந்துமதி உள்பட 4 பேரை கைது செய்தனர். இதுபற்றிய குற்றப்பத்திரிகை கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந் தேதி, விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கை மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமானந்த குமார் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட அஜித்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாத கால ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 வயது சிறுவனின் மீதான விசாரணை இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மற்ற 2 பேரான ஜெயக்குமார், இந்துமதி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்