சொத்துக்காக தாத்தாவை கொலை செய்த பேரனுக்கு ஆயுள் தண்டனை
சொத்துக்காக தாத்தாவை கொலை செய்த பேரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
தாத்தாவை கொன்ற பேரன்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாறு(வயது 90). இவருக்கும், இவரது மகன் வீட்டு பேரன் அசோக்குமார்(36) என்பவருக்கும் சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்தாண்டு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அசோக்குமார் அங்கு கிடந்த கட்டையால் தாத்தா அய்யாறுவை தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அய்யாறு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொளஞ்சிநாதன் கொடுத்த புகாரின் பேரில், உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, சொத்துக்காக தாத்தாவை கொலை செய்த பேரன் அசோக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அசோக்குமார் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சின்னதம்பி ஆஜரானார்.