மனைவியை கொன்ற மர வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொன்ற மர வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-10-13 18:45 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கருமத்துரை பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி வெள்ளச்சி (வயது 40), மாற்றுத்திறனாளி. தங்கவேல், கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூரை அடுத்த புளியந்துரை ஆணைக்காடு பங்களாவில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் குடியேறி மர வியாபாரம் செய்து வந்தார்.

இந்த சூழலில் தங்கவேல் பார்த்து வந்த மர வியாபாரத்தில் நஷ்டமடைந்தார். இதனால் அவர் தனது மனைவி வெள்ளச்சியிடம், உனது பெற்றோர் வீட்டில் இருந்து நகை, பணம் வாங்கி வரும்படி கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 23.9.2015 அன்று கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வெள்ளச்சியை தங்கவேல் அடித்து கொலை செய்தார். இது குறித்து வெள்ளச்சியின் அண்ணன் அண்ணாமலை கரியாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

கைது

இதை தொடர்ந்து, தங்கவேல் மீது கரியாலூர் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட தங்கவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட தங்கவேல், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்