தொழிலாளியை கொலை செய்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு
ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு
ஈரோட்டில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தொழிலாளி
ஈரோடு பெரியசேமூர் கல்லாங்கரடு ஸ்ரீராம் நகர் 8-வது வீதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 25). தொழிலாளி. இவருடைய மனைவி நீலாவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
செல்வகுமாரின் பெரியப்பா மகன் மணிகண்டன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (27). மணிகண்டனுக்கும், லட்சுமிக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி லட்சுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் அவரது கணவர் மணிகண்டன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தபோது, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அடேரி கிராமத்தில் லட்சுமி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிகண்டன், செல்வகுமார், நீலாவதி, செல்வகுமாரின் அக்காள் ஆனந்தி ஆகியோர் ஆத்தூருக்கு சென்று லட்சுமியை ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். பிறகு லட்சுமிக்கு அறிவுரை கூறி கணவருடன் அவர்கள் சேர்த்து வைத்தனர்.
தகராறு
லட்சுமியை தேடி சென்று அழைத்து வந்து கணவருடன் சேர்த்து வைத்ததை லட்சுமியின் அக்காளான பெரியசேமூர் கல்லாங்கரடு பகுதியை சோ்ந்த ஜோதிமணிக்கு (35) பிடிக்கவில்லை. இதை அவமானமாக நினைத்த அவர் செல்வகுமாரின் வீட்டுக்கு சென்று தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்து மிரட்டியுள்ளார். இதனால் செல்வகுமாருக்கும், ஜோதிமணிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி மதியம் செல்வகுமார் தனது மகனையும், அக்காள் மகனையும் அழைத்து கொண்டு ஜோதிமணியின் வீடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜோதிமணி, அவரது தங்கை பரமேஸ்வரி (32), தாய் பாப்பம்மாள் (70), தந்தை கண்ணையன் (74) ஆகியோர் செல்வகுமாரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.
இந்த தகராறு கைகலப்பாக மாறியது. சத்தம் கேட்டு மணிகண்டனின் மனைவி லட்சுமி, அருகில் உள்ள தறிப்பட்டறையில் வேலை பார்த்த மேஸ்திரி குமரேசன் (40), ஜோதிமணியின் தம்பி மூர்த்தி (30), மூர்த்தியின் மாமனார் அண்ணாதுரை (40) ஆகியோரும் அங்கு ஓடோடி வந்தார்கள்.
கொலை
ஜோதிமணி உள்பட 8 பேரும் சேர்ந்து கத்தரிக்கோல், இரும்பு குழாய், கட்டை, கம்பு, செங்கல், கருங்கல் ஆகியவற்றை கொண்டு செல்வகுமாரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த செல்வகுமாரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் செல்வகுமாரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி, பாப்பம்மாள், கண்ணையன் ஆகிய 8 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது ஈரோடு முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை வழக்கு விசாரணை நடந்து வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட கண்ணையன் இறந்துவிட்டார்.
இந்தநிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் அவர், குற்றம் சாட்டப்பட்ட ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி, பாப்பம்மாள் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.