தொழிலாளி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

தொழிலாளி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது

Update: 2022-07-22 16:43 GMT

தொழிலாளி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் இலுப்பையூரணி விசுவநாததாஸ் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). சவரத் தொழிலாளி. இவருடைய மனைவி பாண்டியம்மாள் (31). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கணபதி (55).

பாண்டியம்மாளுக்கும், கணபதியின் மனைவி கருப்பாயிக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

கொலை

இந்த நிலையில் கடந்த 3.4.2014 அன்று வீட்டருகே ராஜேந்திரன் வந்து கொண்டிருந்தார். அப்போது கணபதி, அவருடைய மனைவி கருப்பாயி, மகன்கள் ராமர், லட்சுமணன், கண்ணன் ஆகியோர் அவரை தடுத்து நிறுத்தி தாக்கி உள்ளனர். மேலும் சராமரியாக கத்தியால் குத்தியும், வெட்டியும் கொலை செய்து உள்ளனர். இதனை தடுக்க வந்த பாண்டியம்மாளுக்கும் கத்திக்குத்து விழுந்தது.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் கொலை மற்றும் கொலை முயற்ச்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் கணபதி, கருப்பாயி, ராமர், லட்சுமணன், கண்ணன் ஆகியோர் மும்பைக்கு சென்று தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் 2.4.2022-அன்று மும்பையில் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கினை நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இதில் தம்பதி கணபதி, கருப்பாயி, அவர்களுடைய மகன்கள் ராமர், லட்சுமணன், கண்ணன் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும், அதனை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்