லாரி டிரைவரை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை

Update: 2023-01-24 18:54 GMT

ஸ்ரீரங்கம் மேலூரில் லாரி டிரைவரை கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

லாரி டிரைவர் கொலை

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே மேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆண்டவர் (வயது 44). லாரி டிரைவர். இவருக்கு கனகவள்ளி, வசந்தி ஆகிய 2 மனைவிகள் இருந்தனர். இந்தநிலையில் ஆண்டவர் திருட்டு வழக்கில் பல முறை சிறைக்கு சென்றுவந்துள்ளார். இதனால் 2 மனைவிகளும் ஆண்டவருடன் வாழப்பிடிக்காமல் பிரிந்து சென்றுவிட்டனர்.

இந்தநிலையில் சிறையில் இருந்து வெளியே வந்திருந்த ஆண்டவர் கடந்த 4-7-2018 அன்று இரவு மேலூரில் உள்ள ஒரு டீக்கடை முன் மது போதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கும் ரங்கராஜ் (46), ராஜகோபால் (49) ஆகியோருக்கும் இடையே தகராறு நடந்தது. இதில் ஆத்திரத்தில் 2 பேரும் ஆண்டவரை கற்கள் மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆண்டவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை கொலை செய்த 2 பேரும் தப்பிச்சென்றுவிட்டனர்.

2 பேருக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், ரங்கராஜ், ராஜகோபால் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி 2-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தவழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் குற்றம் சாட்டப்பட்ட ரங்கராஜ், ராஜகோபால் ஆகியோர் மீது சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கே.ஜெயக்குமார் தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து 2 பேரும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலசுப்பிரமணியன் ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்