பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம்

குமரி மாவட்ட கோவில்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம் ரூ.74¼ லட்சத்திற்கு ஏலம் போனது.

Update: 2023-06-26 18:45 GMT

சுசீந்திரம், 

குமரி மாவட்ட கோவில்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம் ரூ.74¼ லட்சத்திற்கு ஏலம் போனது.

பூஜை பொருட்களுக்கான உரிமம்

குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன. இதில் பிரசித்தி பெற்ற கோவிலாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வேளிமலை குமாரகோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன.

இந்த கோவில்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம் ஒரு வருடத்திற்கு தனி நபருக்கு ஏலம் விடப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அலுவலகத்தில் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் ஏலம் நடந்தது. உதவி ஆணையர் தங்கம் முன்னிலையில் ஆய்வாளர்கள் மற்றும் ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். இந்த ஏலம் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக விடப்பட்டது.

ரூ.74¼ லட்சத்திற்கு ஏலம்

அதன் அடிப்படையில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் பிரசாத விற்பனை செய்யும் உரிமம் ரூ.10 லட்சத்து 3 ஆயிரத்திற்கும், கேமரா மற்றும் பக்தர்களின் உடைமைகள் பாதுகாக்கும் உரிமம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்திற்கும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பூமாலை விற்பனை செய்யும் உரிமம் ரூ.18 லட்சத்திற்கும், தேங்காய், பழம் விற்பனை செய்யும் உரிமம் ரூ.17 லட்சத்து 20 ஆயிரத்திற்கும், பொங்கல் பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம் ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் ஏலம் விடப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான காலி மனை ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 900-ம், வேளிமலை குமார கோவிலில் தேங்காய் பழம் விற்பனை செய்யும் உரிமம் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்திற்கும், பூமாலை விற்பனை செய்யும் உரிமம் ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 100-க்கும், தோவாளை கிருஷ்ணசாமி கோவிலுக்கு சொந்தமான 11 கடைகள் தனிநபருக்கு ஓராண்டு காலத்திற்கு ஏலம் விட்டதில் ரூ.12 லட்சத்து 91 ஆயிரத்து 200 என மொத்தம் ரூ.74 லட்சத்து 26 ஆயிரத்து 200-க்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்