வாகன காப்பகங்கள், கழிவறையில் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் ரூ.1 கோடிக்கு ஏலம்

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வாகன காப்பகங்கள், கழிவறையில் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.

Update: 2023-02-27 20:38 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வாகன காப்பகங்கள், கழிவறையில் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.

மாநகராட்சி கடைகள் ஏலம்

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வணிக நிறுவனங்கள், கட்டிடங்கள், கடைகள், வாகன காப்பகங்கள், சந்தைகளில் நுழைவு கட்டண உரிமம் உள்ளிட்டவை ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் தலைமையில் இந்த ஏலம் நடத்தப்பட்டது.

அதன்படி வடசேரி கனகமூலம் சந்தையில் நுழைவு கட்டணம் வசூல் செய்தல் மற்றும் பழங்கள் வைப்பதற்கான கிடங்கு ட்டணம் வசூல் செய்வது தொடர்பான உரிமம் ஏலத்துக்கு வந்தது. அதனை பலரும் ஏலத்துக்கு கேட்ட நிலையில் முடிவில் ரூ.30 லட்சத்து 100-க்கு ஏலம் போனது.

ரூ.1 கோடிக்கு ஏலம்

இதே போல வடசேரி பஸ் நிலையத்திற்கு தெற்கு பக்கம் ஏற்கனவே உள்ள இருசக்கர வாகன காப்பகம் மற்றும் வடசேரி பஸ் நிலையத்திற்கு தெற்கு பக்கம் உள்ள காலி இடத்தில் இருசக்கர வாகன நிறுத்தத்திற்கான கட்டணம் வசூல் செய்திட ஏலம் விடப்பட்டது. இறுதியில் அந்த ஏலம் ரூ.24 லட்சத்து 7 ஆயிரத்துக்கு விடப்பட்டது. இதே போல வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிவறைக்கான உரிமம் பெற ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது.

வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் வந்து செல்லும் பஸ்களின் நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கான ஏலம் ரூ.33 லட்சத்து 33 ஆயிரத்து 333-க்கு விடப்பட்டது. பெரிய பூங்கா நேசமணி மண்டபம் அருகில் உள்ள வாகன காப்பகத்தில் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 500-க்கு ஏலம் சென்றது.

இதன் மூலம் மாநகராட்சிக்குட்பட்ட சொத்துகள் மொத்தமாக உரிமம் ரூ.1 கோடியே 9 லட்சத்து 50 ஆயிரத்து 933 கோடியே ஏலம் போனது. இந்த உரிமம் அனைத்தும் ஓராண்டுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

முன்னதாக ஏலம் எடுப்பதில் வியாபாரிகள், தொழிலதிபர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்