தகுதிச்சான்று இல்லாதகழிவுநீர் அகற்றும் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்
கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக நாமக்கல், ராசிபுரம் நகராட்சி ஆணையாளர்கள் நாமக்கல் வடக்கு, தெற்கு மண்டல போக்குவரத்து அலுவலர்கள் இணைந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல் நகராட்சி அலுலகத்தில் நடைபெற்றது. நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி, நாமக்கல் நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, ராசிபுரம் துப்புரவு அலுவலர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் பழனிசாமி, செல்வகுமார், பாஸ்கர் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் செப்டிக் டேங்க் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கசடு கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் தகுதி சான்று, வாகன காப்பீடு, வாகன அனுமதிச்சீட்டு ஆகியவைகளை ஆய்வு செய்து, தகுதிச்சான்று இல்லாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். கசடு கழிவுநீர் அகற்றும் உரிமையாளர்கள், தன்னிடம் பணியாற்றும் பணியாளர்கள் எந்திரம் மூலம் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்கள் செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கசடு கழிவு நீர் அகற்றும் உரிமையாளர்கள் தன்னிடம் பணியாற்றும் பணியாளர்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.