பஸ் மோதி எல்.ஐ.சி. முகவர் பலி

தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி எல்.ஐ.சி. முகவர் பலியானார். அவருடைய அண்ணன் மகன் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-09-17 18:58 GMT

தாரமங்கலம்

எல்.ஐ.சி. முகவர்

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே வீரக்கல் கக்குவான் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 45). எல்.ஐ.சி. முகவர். மேலும் வீட்டில் விசைத்தறி தொழிலும் நடத்தி வந்தார். இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை தங்கவேல் தாரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் தனது அண்ணன் மகன் ஹரிஹரன் (22) என்பவருடன் சென்றார். மோட்டார் சைக்கிளை தங்கவேல் ஓட்டினார். ஹரிகரன் பின்னால் அமர்ந்திருந்தார்.

அப்போது தாரமங்கலம் அருகே பாறைக்கல்லூர் பகுதியில் வந்தபோது எதிரே லாரி ஒன்று சாலையை கடக்க முயன்றது. இதனால் தங்கவேல் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு லாரி செல்லும் வரை காத்து கொண்டிருந்தார். அந்த நேரம் மேட்டூரில் இருந்து தாரமங்கலத்துக்கு சென்ற தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் லாரியின் மீதும் மோதி நின்றது.

டிரைவர்கள் தப்பி ஓட்டம்

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஹரிகரன் பலத்த காயம் அடைந்து மயங்கினார். பஸ்சில் வந்த பயணிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஹரிகரனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தாரமங்கலம் போலீசார் தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலையில் நின்ற லாரி, பஸ்சை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இதற்கிடையே விபத்துக்கு காரணமான பஸ், லாரி டிரைவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர்களை தேடி வருகின்றனர். விபத்தில் எல்.ஐ.சி. முகவர் பலியான சம்பவம் வீரக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்