பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அடுத்த அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவர் எல்.ஐ.சி. முகவராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் ஆனந்த் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். பின்னர் நேற்று மாலை ஆனந்த் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.