எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் கொட்டும் மழையில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க கிளை தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். கோட்ட இணை செயலாளர் சபரிநாதன், கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும், பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், வெளிநாட்டு பாலிசிதாரர்களுக்கு ஏதுவாக சேவை அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது மழை பெய்தது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கிளை நிர்வாகிகள் ராஜசேகர், ஜெய்சங்கர், ராஜாரவி, சேகர், சதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிளை பொருளாளர் சேக்கிழார் நன்றி கூறினார்.