எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இந்திய ஆயுள் காப்பீட்டு (எல்.ஐ.சி.) கழக முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு கடந்த மாதம் 1-ந்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி பெரம்பலூர் வெங்கேடசபுரத்தில் உள்ள எல்.ஐ.சி. கிளை முன்பு இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர் சங்கத்தினர் கடந்த 11-ந்தேதி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) வரை ஓய்வு தினமாக அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடந்த 3-வது நாள் ஓய்வு தின ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் சுத்தாங்காத்து தலைமை தாங்கினார். பாலிசிதாரர்களுக்கு பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். பாலிசி மற்றும் இதர பாலிசியின் சேவை மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். முகவர்களுக்கு பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவக்குழு காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். முகவர் நல நிதி அமைத்திட வேண்டும். முகவர்களை தொழில்முறை முகவர்களாக அங்கீகரிக்க வேண்டும். முகவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். முதன்மை காப்பீட்டு ஆலோசகர் மூலமாக வருகின்ற அனைத்து விதமான வருமானத்தையும் முன்பணம் பெறுவதற்கு கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்ட எல்.ஐ.சி. முகவர்கள் கோஷங்களை எழுப்பினர். இன்று(வெள்ளிக் கிழமை) மதியமும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.