ஆபத்தான நிலையில் நூலக கட்டிடம்
திருநாகேஸ்வரத்தில் ஆபத்தான நிலையில் நூலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவிடைமருதூர்:
திருநாகேஸ்வரத்தில் ஆபத்தான நிலையில் நூலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நூலகம்
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தேப்பெருமாநல்லூர் செல்லும் சாலையில் கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்திற்கு திருநாகேஸ்வரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வாசகர்களாக உள்ளனர்.இந்த நூலகத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
சேதம் அடைந்துள்ளது
இந்த நிலையில் கிளை நூலக கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் மேற் கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது
சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வாசகர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நூலக கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளதால் வாசகர்கள் நூலகத்துக்கு செல்லவே அச்சப்படுகின்றனர்.
புதிதாக கட்ட வேண்டும்
எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்குள் கிளை நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்டிடம் கட்டும் வரை பாதுகாப்பான இடத்தில் நூலகம் செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.