அரசு ஆஸ்பத்திரியில் 'தாய்மை நூலகம்' திறப்பு
தஞ்சை கல்லுக்குளம் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தாய்மை நூலகம் திறக்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நல்ல மனநிலையை உருவாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை கல்லுக்குளம் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தாய்மை நூலகம் திறக்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நல்ல மனநிலையை உருவாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகளின் ஆரோக்கியம்
கர்ப்பிணிகள் ஆரோக்கியமாக இருந்தால் பிறக்கப்போகும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதே மருத்துவ தத்துவம். கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அபாரமாக இருக்கும். அப்போது தாயின் மனநிலை குழந்தைக்கும் அப்படியே பரிமாறப்படும் என மருத்துவ ஆய்வு கூறுகிறது. அந்த காலக்கட்டத்தில் கர்ப்பிணிகள் புத்தகம் படித்தால் அது குழந்தையின் வளர்ச்சிக்கும் உகந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் கல்லுக்குளம், சீனிவாசபுரம், கரந்தை, மகர்நோன்புச்சாவடி ஆகிய 4 இடங்களில் ஆரம்பசுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரசவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த அரசு ஆஸ்பத்திரிகளில் அனைத்து வகையான டாக்டர்களும் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம்
அந்த வகையில் தஞ்சை மேரீஸ்கார்னர் கல்லுக்குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இங்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் கர்ப்பிணிகள் வந்து பரிசோதனை செய்து கொள்கிறார்கள். மேலும் பிரசவம் ஆன பெண்களும் வந்து பரிசோதனைகளை மேற்கொள்வது, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்றவையும் நடந்து வருகிறது.
தாய்மை நூலகம்
தற்போது இந்த ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகள், பிரசவம் ஆன பெண்கள் பரிசோதனைக்காக காத்திருக்கும் நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நல்ல மனநிலையை உருவாக்கவும், புத்துணர்ச்சி அளிக்கவும் தாய்மை நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்த ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு வரும் பெண்கள் 20 முதல் 30 நிமிடம் வரை காத்திருக்கவேண்டியது உள்ளது. இந்த காத்திருப்பு ேநரத்தில் பெண்கள் புத்தகங்களை படித்தால் மனநலம் நன்றாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.
கர்ப்பிணிகள் மகிழ்ச்சி
இந்த நூலகத்துக்கு கர்ப்பிணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகள் ஆர்வத்துடன் நூலகத்துக்கு சென்று புத்தகங்களை படித்து வருகிறார்கள். செல்போன்களில் பொழுதை கழிக்காமல் பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட இந்த நூலகம் உதவுவதாக கர்ப்பிணிகள், பிரசவித்த பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.