நூலகங்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர் வைக்க வேண்டும்; மேயரிடம் பொதுமக்கள் மனு

நூலகங்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர் வைக்க வேண்டும் என்று மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2023-08-01 20:01 GMT

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி கொடுத்த மனுவில், "மேலப்பாளையம் கரீம்நகரில் கழிவு நீரோடை அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. சில ஆக்கிரமிப்பாளர்களின் குறுக்கீடுகளினால் கழிவுநீரோடை அமைக்கும் பணியானது முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த பணியை விரைந்து முடித்து தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாளையங்கோட்டை பகுதி மக்கள் பெர்டின்ராயன் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், நெல்லை மாநகராட்சி 55 வார்டுகளிலும் வார்டுக்கு ஒரு நூலகம் இணையதள வசதி மற்றும் அறிவியல் சார்ந்த நூல்களோடு அமைக்க வேண்டும். அதற்கு சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயரை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பாளையங்கோட்டை பெரியபாளையம் பகுதி மக்கள் ஊர் தலைவர் பெருமாள் தலைமையில் கொடுத்த மனுவில், "பெரியபாளையத்தில் பாப்பாத்தி அம்மன் கோவில் மேற்கூரையில் மின்கம்பி செல்வதால் உழவார பணிக்கு இடையூறாக உள்ளது. மின்வாரியத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே அந்த மின்கம்பியை மாற்றித்தர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

டக்கரம்மாள்புரம் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க தனி வால்வு அமைத்து தர வேண்டும் என்று கவுன்சிலர் சகாய ஜூலியட் மேரி தலைமையில் அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் கொடுத்த மனுவில், மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 46-வது வார்டு முப்புடாதி அம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் காலனி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அங்கு சமூக விரோத செயல்கள் அதிகம் நடக்கிறது. எனவே உடனே அதை திறக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்