நூலகங்களின் நிலையும்...! இளைஞர்களின் வருகையும்...!

நூலகங்களின் நிலையும்...! இளைஞர்களின் வருகையும்...!

Update: 2022-10-26 19:13 GMT

ஒரு நூலகம் திறக்கப்படும் போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பார்கள்.

ஒரு இனத்தை அடிமையாக்க நினைப்பவர்கள், முதலில் அவர்களின் கைகளில் இருக்கும் புத்தகங்களை பறித்து எறிந்துவிடுவார்கள்.

இதைத்தான் ஆரம்ப காலத்தில் இருந்து ஆதிக்க சக்திகள் செய்து வந்தன.

கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களைத் திறந்து கடைக்கோடியின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுத்து அந்த சதியினை முறியடித்தவர் பெருந்தலைவர் காமராஜர். அதன்பிறகே கல்வியிலும், வாழ்விலும் நாம் எழுச்சியைச் சந்தித்துக்கொண்டு வருகிறோம்.

புத்தகங்களின் அருமையையும், அதை அடைகாத்துவரும் நூலகங்களின் பெருமையையும் இதன் மூலம் உணர முடியும்.

அச்சம்

நூலகங்களுக்கு போய் புத்தகங்களை புரட்டி வாசிப்பது என்பது ஒருவகையான தவம் என்றே சொல்லலாம். அந்த பழக்கம் நம்மிடையே குறைந்து வருகிறதோ என்ற அச்சத்தை புதிய தொழில்நுட்பங்கள் அதிகரிக்கச் செய்கின்றன.

அவைகளுக்கு ஈடுகொடுத்து நமது இளைஞர்களை நூலகங்கள் மீட்டு எடுக்குமா? நூலகங்களின் நிலை என்ன? இளைஞர்கள், இளம் பெண்களின் புத்தக வாசிப்பு எப்படி இருக்கிறது? என்பதை கீழே காண்போம்.

நூலகத்தின் பங்கு

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு, கற்றனைத் தூறும் அறிவு என்ற குறளுக்கு ஏற்ப, கிணற்றில் தண்ணீர் இறைக்க, இறைக்க தண்ணீர் சுரப்பதை போல், படிக்க படிக்க கல்வி அறிவு பெருகும். எந்த அளவுக்கு நாம் படிக்கிறோமோ அந்த அளவுக்கு அறிவு பெருகும். நம்முடைய அறிவுத்திறனை அதிகரிக்கக்கூடிய, நூல்கள் இருக்கும் இடம் தான் நூலகம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நூலகங்கள் பல்வேறு அறிஞர்களை உருவாக்கி இருக்கிறது. நூலகம் இல்லாத ஊர்களில் வசிக்க வேண்டாம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு நூலகத்தின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது.

142 நூலகங்கள்

இத்தகைய நூலகங்கள் கடலூர் மாவட்டத்தில் 142 உள்ளன. கடலூரில் மாவட்ட மைய நூலகம், சிதம்பரம், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 7 இடங்களில் பெரிய நூலகங்கள், 65 கிளை நூலகங்கள், 47 ஊர்ப்புற நூலகங்கள், 23 பகுதி நேர நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு 29 லட்சத்து 32 ஆயிரத்து 808 புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகங்களில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 872 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 8 ஆயிரத்து 808 பேர் புரவலர்களாக உள்ளனர். இதில் மாவட்ட மைய நூலகத்தில் மட்டும் 1 லட்சத்து 88 ஆயிரத்து 885 புத்தகங்களும், 26 ஆயிரத்து 367 உறுப்பினர்கள், 307 புரவலர்களும் உள்ளனர்.

இங்கு நாளிதழ் பிரிவு, குறிப்பு எடுத்தல் பிரிவு, போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு, நூல் இரவல், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் படிப்பகம் உள்ளிட்ட பிரிவுகளும் உள்ளன. கதை.கட்டுரை, நாவல், குரூப் -1, 2, 4 உள்ளிட்ட போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் என ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன. 92 பருவ நாளிதழ்கள் வாங்கப்படுகிறது.

காலையில் பதிவிட்டு மாலையில் மூடல்

இங்கு 2014-ம் ஆண்டு முதல் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. அதில் இது வரை 600-க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்து உள்ளனர். கலெக்டர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர்கள், போலீஸ் என பல்வேறு பிரிவுகளிலும் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நூலகங்கள் கிராமப்புறங்களில் உள்ளதில், 10-க்கும் மேற்பட்ட நூலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சில இடங்களில் போதிய இடவசதியின்றி செயல்பட்டு வருகிறது. ஊர்ப்புற, பகுதி நேர நூலகங்களில் சில நூலகர்கள் பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தற்போது ஆன்லைன் மூலம் நூலகர்களின் வருகை பதிவேடு பராமரிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் தினந்தோறும் நூலகத்துக்கு வந்து செல்கிறார்கள். சிலர் காலையில் வந்து ஆன்லைனின் பதிவு செய்துவிட்டு, மாலையில் வந்து மூடி விட்டு செல்வதாக குற்றச்சாட்டும் எழுந்தது. அதையும் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வாசிப்பு திறன்

இது தவிர இந்த நூலகங்களில் வாசகர்களின் வசதிக்காக ஏராளமான புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக மாணவர்களுக்கு பாடம் வாரியாக, அறிவியல், வரலாறு, கணினி உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள் எளிதில் தங்களுக்கு அருகில் உள்ள நூலகத்துக்கு சென்று படித்து பயன்பெற்று வருகிறார்கள். பொதுமக்களும் நேரம் கிடைக்கும் போது வந்து படித்து வருகிறார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மாணவர்களின் வாசிப்பு திறன் இல்லை. அதை ஊக்குவிக்க நூலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களிடையே கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடத்தி ஊக்குவித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இவை ஊர்ப்புற, பகுதி நூலகங்களில் அந்த அளவுக்கு இல்லை என்றே கூறலாம். இதை மேலும் ஊக்குவிக்க வேண்டும். அதேபோல் சேதமடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்களை கட்டிக்கொடுக்க வேண்டும். புவனகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள கிளை நூலகம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாசகர்கள் அச்சத்துடன் அமர்ந்து படித்து வருகிறார்கள். ஆகவே இதை உடனடியாக மாற்ற வேண்டும்.

புதிய கட்டிடம்

சேத்தியாத்தோப்பு பேரூராட்சி பகுதியில் கிளை நூலகம் மையப்பகுதியில் உள்ளது. இந்த நூலகம் 1999-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. ஆனால் இந்த கட்டிடம் மிகவும் மோசமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆகவே இந்த கட்டிடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட வேண்டும். மேலும் இங்கு தினசரி நாளிதழ்கள், வார இதழ்களை அதிகமாக வாங்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் பல்வேறு இடங்களில் உள்ள நூலகங்களை ஆய்வு செய்து, சேதமடைந்த நூலகங்களை சீரமைக்க வேண்டும். இடவசதி இல்லாத நூலகங்களை கண்டறிந்து, புதிய கட்டிடங்கள் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழிப்புணர்வு

கடலூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் பாஸ்கரன்:-

கடலூர் மாவட்ட மைய நூலகம் அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கான தனி படிப்பகம் உள்ளது. போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு குறிப்பெடுத்தல் வசதி உள்ளது. இது கிராமப்புற மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. விரைவில் அவர்களுக்காக சாப்பிடும் அறை அமைக்கப்பட உள்ளது. அரசு துறை தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளிகளுக்கு சென்று புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம்.

தேசிய தலைவர்கள் பிறந்த நாள், நினைவு தினத்தையொட்டி மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி நடத்தி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். வாசிப்பு திறனை அதிகரித்து வருகிறோம்.

சேத்தியாத்தோப்பு பூசைமணி:- டிப்ளமோ படித்துள்ள நான், சேத்தியாத்தோப்பு கிளை நூலகத்தில் வாசகராக உள்ளேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகத்திற்கு சென்று புத்தகம் படித்து வருகிறேன். ஆனால் நூலக கட்டிடம் சேதமடைந்து உள்ளது. மழைக்காலங்களில் கட்டிடத்தில் மழைநீர் கசிந்து ஒழுகிறது. ஆகவே இந்த கட்டிடத்தை விரைந்து சீரமைக்க வேண்டும். தினசரி மற்றும் வார இதழ்களை அதிகமாக வாங்க வேண்டும்.

புவனகிரி சின்னப்ப முதலி தெருவை சேர்ந்த செந்தில்குமார்:-

புவனகிரி நூலகத்தில் அமர்ந்து படிக்க முடியாத அளவுக்கு கட்டிடம் சேதமடைந்து உள்ளது. ஆகவே இந்த கட்டிடத்தை மாற்ற வேண்டும். மாணவர்களுக்கு வாசிப்பு திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள இளைஞர்கள், செல்போனில் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். ஆகவே சிறுவயதில் இருந்தே மாணவர்களை படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

கீழ்புவனகிரி முல்லைமாறன்:- சில நூலகங்களில் நூலகர்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை. போட்டித்தேர்வுக்கு தயாராகும் நிலையில் உள்ள நூல்களை அதிக அளவில் வாங்கி வைக்க வேண்டும். அப்போது தான் படிக்கும் மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

அறிவு களஞ்சியமாக இருக்கும் இந்த நூலகங்களை பயன்படுத்தி, மாணவர்கள் தங்கள் வாசிப்பு திறனை அதிகப்படுத்தி, மேலும் வளர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags:    

மேலும் செய்திகள்