கீரை அறுவடை பணிகள் தீவிரம்

பொறையாறு பகுதியில் கீரை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-07-05 17:48 GMT

பொறையாறு:

பொறையாறு பகுதியில் கீரை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயமும், அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளில் நெல், பருத்தி, உளுந்து, கரும்பு நிலக்கடலை, எள், சோளம், கம்பு, மரவள்ளி கிழங்கு, சர்க்கரை வள்ளிகிழங்கு கேழ்வரகு, பனங்கிழங்கு, புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், மிளகாய், கத்தரிக்காய், முளைக்கீரை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கீரை அறுவடை பணி

குறிப்பாக பொறையாறு அருகே காழியப்பநல்லூர், ஆணைக்கோவில், பத்துகட்டு, செம்பனார்கோவில், பரசலூர், மேலபாதி, கஞ்சாநகரம், கிடாரங்கொண்டான், கீழையூர், காளகஸ்திநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முளைக்கீரையை விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது ஆணைக்கோவில், அனந்தமங்கலம் கிராம பகுதியை சேர்ந்த விவசாயிகள் முளைக்கீரை அறுவடை செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

உடல் உஷ்ணம்

இப்பகுதியில் நிலத்தடி நீர் மூலம் முளைக்கீரை சாகுபடி செய்து வருகிறோம். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள கீரையை பறித்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம். வெயில் காலத்தில் முளைக்கீரையை உட்கொண்டால் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.மேலும், செரிமானத்தன்மையை கொடுக்கும். இதனால். பொதுமக்கள் முளைக்கீரையை விரும்பி வாங்கி செல்கின்றனர் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்