ரூ.8 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக ஆம்பூர் மூதாட்டிக்கு கடிதம்
ஆம்பூர் அருகே வறுமையில் வாடும் மூதாட்டி ரூ.8 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ஆம்பூர் அருகே வறுமையில் வாடும் மூதாட்டி ரூ.8 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.8 கோடி வரி ஏய்ப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குல்ஜார் (வயது 60). இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். எந்த வேலையும், வருமானமும் இல்லாமல் வறுமையில் வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரித்துறையிலிருந்து அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு சென்று அவருக்கு கடிதம் வழங்கியுள்ளனர். அதில் அவர் ஐ.எஸ். எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்தி அதன் மூலம் ரூ.8 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை அரசுக்கு செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பரபரப்பு
வாழ்க்கை நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வரும் அவர் தொழில் நடத்தி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கடிதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் அதிர்ச்சியடைந்தார். அதைத் தொடர்ந்து குல்ஜார் இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
யாரோ குல்ஜாருடைய பான் கார்டு, ஆதார் அட்டையை பயன்படுத்தி சரக்கு மற்றும் சேவை வரி துறையில் தொழில் நிறுவனத்தை பதிவு செய்து அதன் மூலம் தொழில் நடத்தி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆம்பூர் பகுதியில் இதுபோன்று தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.