மரக்காணத்தில்பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்ட கலைநிகழ்ச்சிகலெக்டர் தலைமையில் நடைபெற்றது

மரக்காணத்தில் பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்ட கலைநிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-01-24 18:45 GMT


விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ் பெண் குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், கருவிலிருக்கும் குழந்தை ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று பார்ப்பதை தடுப்பது, ஆண் பிள்ளைகளைப்போலவே பெண் பிள்ளைகளுக்கும் அனைத்துவிதமான தகுதிகளும், திறமைகளும் உள்ளது போன்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது, பிறந்த பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கல்வி அளிப்பது, அவர்களின் கல்வி இடைநிற்றலை தடுப்பது, பெண் குழந்தைகளுக்கு சரியான தொடுதல், தவறான தொடுதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பிறந்த குழந்தைகளை ஆரோக்கியமாகவும், அடிப்படை கல்வி வழங்கிடும் வகையிலும் அங்கன்வாடி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண் குழந்தைகளை பாதுகாப்பது, கல்வி வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கல்வியை வழங்க வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் சமம் என்பதை உணர்ந்து எந்த குழந்தையாக இருந்தாலும் பெற்றெடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற மனநிலை உருவாக வேண்டும் என்றார். தொடர்ந்து, கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, மரக்காணம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தயாளன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் அன்பழகி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் பொற்கொடி, மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நீலாம்பாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராசன், திருவேங்கடம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்