ஜனநாயகம் காப்போம் பேரணி

விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜனநாயகம் காப்போம் பேரணி நடந்தது.

Update: 2023-04-13 19:00 GMT

விழுப்புரம்:

அம்பேத்கர் பிறந்த நாளன்று மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு பேரணி மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. அறிவித்து இருந்தார். அதன்படி விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நேற்று மாலை விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் ஜனநாயகம் காப்போம் என்ற அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு மாவட்ட செயலாளர்கள் சேரன், ஆற்றலரசு, பாமரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

5 ஆயிரம் பேர் பங்கேற்பு

இதில் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை.ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பேரணியை தொடங்கி வைத்தார். இப்பேரணியானது, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வழுதரெட்டியில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலை வரை சென்று முடிவடைந்தது. தொடர்ந்து, அங்குள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இப்பேரணியில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், மயிலம் தொகுதி செயலாளர் செல்வச்சீமான், திண்டிவனம் தொகுதி செயலாளர் வக்கீல் பூபால், மேல்மலையனூர் மேற்கு ஒன்றிய பொருளாளர் ஜான், திண்டிவனம் நகரமன்ற துணைத்தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, விழுப்புரம் நகர செயலாளர் சரவணன், தொகுதி துணைச்செயலாளர் பெரியார் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியின்போது, இவர்கள் சனாதனத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்